மானுடவியல் என்பது மனிதனைப் பற்றி அறியக்கூடிய அறிவியல் துறையாகும். கல்விசார் நிலையில் இத்துறை தோன்றி ஏறக்குறைய 119 ஆண்டுகள் தாம் ஆகின்றன. அதாவது சர் எட்வர்ட் பானட் டைலர் கி.பி.1884 -ஆம் ஆண்டு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மானிடவியல் துறைக்குப் பொறுப்பேற்ற ஆண்டுதான் இத்துறை முறைப்படியான தோற்றத்தைப் பெற்றது. இப்பல்கலைக்கழகத்தில் டைலர் பெற்ற நியமனமே கல்விசார் நிலையில் மானிடவியலார் பெற்ற முதல் பதவியாகும். இதன் பின்னரே மானிடவியல் துறை உலகெங்கும் வேரூன்றத் தொடங்கியது. இருப்பினும் மானிடவியல் துறையானது பல்வேறு துறைச் சார்ந்த அறிஞர்களின் அறிவு வேட்கையாலும் உழைப்பினாலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே தோற்றம் பெற்று விட்டது. இத்துறையின் தோற்றம் மற்றும் வளர்ச்சி நிலைகள் குறித்து காணும் பொழுது பல்வேறு காலக் கட்டத்தில் வாழ்ந்த மக்களின் மரபுகள், வாழ்க்கை முறைகள், நம்பிக்கைகள், பண்பாட்டு நிலைகள், உயிரியல் நிலைகளென பரந்து பட்ட நிலையில் நின்று ஆராய்வது சரியாக இருக்கும். இக்கால மானிடவியல் கடலென விரிந்த துறையாதலால் அதை உடல் சார்ந்த மானிடவியல் பண்பாட்டு மானிடவியல் என்னும் பிரிவுகளில் நின்று அறிவது பொருத்தமாக இருக்கும். மானுடவியலின் மையக் கருத்தாக விளங்கும் பண்பாட்டை அறிவியல் பூர்வமாக விளக்குவதற்கு முதலில் மானுடவியலின் குறித்து அறிவது அவசியமாகிறது.
Shanlax Journals (Thu,) studied this question.