மனித வாழ்க்கைக்கு மிக இன்றியமையாதது உணவு. உணவின்றி உயிர் வாழ்வது மிகக் கடினம். உடையின்றி உயிர் வாழலாம். இக்காலத்தில் கூட உலகில் சில பகுதிகளில் உடையின்றியோ குறைந்த உடையுடனோ மக்கள் வாழ்வதை அறிகிறோம். தமிழர் நிலத்தைக் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்தாகப் பகுத்தனர். இது இயற்கையான பகுப்பு. மலையும் மலைசார்ந்த இடத்தையும் குறிஞ்சி என்று கூறுவர். காடும் காடுசார்ந்த இடத்தையும் முல்லை என்றனர். வயலும் வயல்சார்ந்த இடத்தை மருதம் என்ற அழைத்தனர். கடலும் கடல்சார்ந்த இடத்தை நெய்தல் என்றனர். மலைப்பகுதியும் காட்டுப்பகுதியும் திரிந்த போது வளமில்லாமல் பாலையாயிற்று. அதைப் பாலை நிலம் என்றனர். பொது நிலையில் மலையில் தேன் கிழங்கு போன்றவைகள மிகுதியாகக் கிடைக்கும். நெய்தல் நிலப்பகுதியில் மீன் மிகுதியாகக் கிடைக்கும். கருவாடு கிடைக்கும். பெரிய நண்டுகளின் இறைச்சி கிடைக்கும். முல்லை நிலத்தில் ஆடு மாடுகள் வளர்ப்பதால் ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பால், தயிர் போன்றவை மிகுதியாகக் கிடைக்கும். மருத நிலத்தில் நெல்லும் நெல்சோறும் காய்கறிகளும் மிகுதியாக உள்ளன.
shanlax (Wed,) studied this question.